
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது நார்த்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லையன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதமடித்தும், துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜூரெல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 15 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிரங்கிய நிதீஷ் 34 ரன்னிலும், ஷர்தூல் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை துனுஷ் கோட்யான் 5 ரன்களுடனும், அன்ஷுல் கம்போல் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் தனூஷ் கோட்யான் 15 ரன்களுக்கும், அன்ஷூல் கம்போஜ் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து லையன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங்க் மற்றும் ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.