
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் இரட்டை சதமடித்ததுடன் 26 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 204 ரன்களையும், துருவ் ஜூரெல் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 94 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களயும் சேர்க்க மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் ஹல், ஸமான் அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லையன்ஸ் அணியில்பென் மெக்கின்னி 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எமிலோ கேவும் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹெய்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஹோல்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் பொறுப்புடன் விளையாடி வந்த ஹெய்ன்ஸ் சதமடித்து அசத்திய நிலையில், ஹோல்டன் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இங்கிலாந்து லையன்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களைச் சேர்த்திருந்தது.