
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது நார்த்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லையன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயர் பொறுப்புடன் விளையாடி விக்கெட இழப்பை தடுத்தார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களைக் கடந்தது.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த கருண் நாயர் 40 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்த துருவ் ஜூரெலும் அரைசதம் கடந்தார். பின்னர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜூரெல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 15 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுலும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிரங்கிய நிதீஷ் 34 ரன்னிலும், ஷர்தூல் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.