
இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் தனது மிகச்சிறந்த திறமைகளால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமீப காலங்களில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள இவர் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பின் அவரைப்போலவே அதிரடியாக விளையாடும் நல்ல விக்கெட் கீப்பர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள இவர் வருங்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக போற்றப்படுகிறார். இதுபோல் நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் வீரர்கள் நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் பேசப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ரிஷப் பந்த் தீவிர ரசிகர் என்றும் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கடந்த சில வருடங்களாகவே அரசல் புரசலாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதிலும் 2018இல் இந்த இருவரும் டேட்டிங் செய்வதாகவும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய ஊர்வசி ரவுத்தேலா, நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு சென்றேன். 10 மணி நேரம் தொடர்ச்சியான ஷூட்டிங்கிற்கு பிறகு ரூமுக்கு திரும்பினேன். அங்கு என்னை பார்க்க வந்த ரிஷப் பந்த் எனக்காக நீண்டநேரம் லாபியில் காத்துக்கொண்டிருந்தார். நான் மிகுந்த சோர்வாக இருந்தேன். அதனால் எனது ஃபோனை கவனிக்கவில்லை. எனது ஃபோனுக்கு நிறைய மிஸ்டு கால்கள் வந்திருந்தன.