
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபர் ஆசாம் கேப்டனாக பாகிஸ்தானை வழிநடத்தி வந்த நிலையில், தற்போது அணியை ஷான் மசூத் வழிநடத்தவுள்ளார். இருப்பினும், கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாமின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து பேசிய அவர், “அனைத்து வடிவிலான போட்டிகளிலும் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் பாபர் ஆசாமும் ஒருவர். எங்களது காலத்தில் ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் தொடர்களில் விளையாடுவது சிறப்பாக இருக்கும்.
பாபர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை ஒப்பிடுவது கிட்டத்தட்ட ஸ்மித் மற்றும் விராட் கோலியை ஒப்பிடுவது போன்றதே. பாபர் அசாம் பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் மைதானங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் அவர் சதங்கள் அடித்துள்ளார். வலுவான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என நினைக்கிறேன்.