
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ஐசிசி இரு அணிகளுக்கும் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது.
இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் 5 டெஸ்டுகளில் 4இல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2ஆவது டெஸ்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்டையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது.
இதே போல் ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் இந்த தவறை செய்திருக்கிறது. அந்த அணி மான்செஸ்டரில் மழையால் டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்டில் மட்டும் 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்கிறது. ஐசிசியின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும். அத்துடன் ஒரு ஓவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அணிக்கு 5 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.