
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜாம்ஷெட்பூரில் உள்ள கீனன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஷரந்தீப் சிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் விராட் சிங் 40 ரன்களையும், அன்குல் ராய் 46 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, அணியின் கேப்டன் இஷான் கிஷான், குமார் குஷாக்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் ஷாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு முகமது அலி - ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 17 ரன்களுக்கும், முகமது அலி 37 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களில் முகமது 24 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 27.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.