இன்றைய ஆட்டத்திற்கு பிறகு நம்பிக்கை அதிகரித்துவிட்டது - கிளென் மேக்ஸ்வெல்!
ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கூட பேட்டிங் யுத்தியில் எந்த மாற்றமும் செய்யாமல் சேஸிங் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தன் அணிகள் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் உலகக் கோப்பை வரலாற்றிலே மிகப்பெரிய ஒரு இன்னிங்ஸை விளையாடி சாதனை படைத்திருக்கிறார் மேக்ஸ்வெல். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் நின்ற மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும். மேக்ஸ்வெல் விளையாடிய போது தசைப்பிடிப்பால் கடும் வலியால் துடித்தார். எனினும் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக முடித்தார்.
Trending
இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய கிளென் மேக்ஸ்வெல், “நாங்கள் பில்டிங் செய்யும் போது இன்று கடும் வெப்பமாக இருந்தது. இந்த வெயிலில் நான் எந்த உடல் பயிற்சியும் செய்யவில்லை. அதனால் தான் இன்று நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என நினைக்கிறேன். பேட்டிங் செய்யும்போது கடைசிவரை களத்தில் நின்றால், வெற்றி பெற முடியும் என நினைத்தேன். காலை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் எண்ணினேன்.
ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கூட பேட்டிங் யுத்தியில் எந்த மாற்றமும் செய்யாமல் சேஸிங் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். என்னுடைய ஷாட் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அதை செய்தாலே வென்று விடலாம் என நினைத்தேன்.ஆடுகளத்தில் பவுன்ஸ் கொஞ்சம் இருந்தது. இதனால் நம்பிக்கையோடு விளையாடினேன். ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசி ஆடுகளத்தில் இருந்த சூழலை நன்றாக பயன்படுத்திக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
என்னுடைய ஒரு கேட்ச் மிஸ் ஆனது அந்த வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தான் இன்று நான் சிறப்பாக விளையாடினேன். எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் இப்படி ஒரு ஆட்டத்தை நான் ஆடி இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன். ஆனால் எனக்கு கிடைத்த (கேட்ச் மிஸ்) வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுதான் இன்று பேட்டிங்கில் சாதிக்க முடிந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்த பிறகு எங்கள் அணி உலக கோப்பையில் வீழ்ந்து விடும் என்று அனைவரும் எங்களை பற்றி எழுதினார்கள். ஆனால் எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்தது. இன்றைய ஆட்டத்திற்கு பிறகு அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துவிட்டது என நான் எண்ணுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now