
நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹேஜா ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய ஜெகதீசன் 6 ரன்னிலும், பிரதோஷ் பால் 28 ரன்னிலும், பாபா இந்திரஜித் 7 ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா தனது அரைசதத்தை கடந்த நிலையில், இறுதியில் 4 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து வந்த ஆண்ட்ரே சித்தார்த் 40 ரன்களையும், முகமது அலி 48 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழக்க, தமிழ்நாடு அணி 48.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்களில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தர்ஷன் நல்கண்டெே 6 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் தூபே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.