விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில் அணியின் தொடக்க வீரர்கள் அங்கிரிஷ் ரகுவன்ஷி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆயுஷ் மத்ரே ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹர்திக் தோமர் 11 ரன்களுக்கும், சித்தேஷ் லாத் 34 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - அன்கொல்கர் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்கொல்கர் 43 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சூர்யன்ஷ் 10 ரன்களுக்கும், ஷர்துல் தாக்கூர் 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 137 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்களைக் குவித்தது.