
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ஜம்மூ-காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தமிழ்நாடு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் துஷார் ரஹேஜா 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து ஜெகதீசனுடன் இணைந்த பாபா இந்திரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் தனது சதத்தையும், அவருடன் இணைந்து விளையாடி வந்த இந்திரஜித் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 170 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 78 ரன்களைச் சேர்த்த நிலையில் இந்திரஜித் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஜய் சங்கரும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அபாரமாக விளையாடிய வந்த ஜெகதீசன் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 165 ரன்களைக் குவித்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார்.