
கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா டைடே மற்றும் அமன் மொகெடே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடிய அதர்வா டைடே சதமடித்து அசத்தியதுடன் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 143 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் யாஷ் ரத்தோட் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 91 ரன்களை சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் அந்த அணி 342 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் ஆகாஷ் தீப், மனவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 52 ரன்களையும், கேப்டன் ரஜத் படித்தார் 66 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 214 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் யஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் தூபே, பர்த் ரகெடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.