
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டம் ஒன்றில் நதமிழ்நாடு அணி பஞ்சாபை எதிர்கொண்டது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரான் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்சிம்ரான் சிங் அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் மந்தீப் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 68 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் பாபா அபாரஜித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.