
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக்கப் பெத்தல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்திய நிலையில் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து விராட் கோலியும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்திய நிலையில், 62 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தனார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் விராட் கோலி 53 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 8500 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார்.