
ஐசிசி உலகக் கோப்பை தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் ஏற்கனவே 6 போட்டியில் 6 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியிலும் வென்று அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெரும் முனைப்புடன் களமிறங்கியது.
மறுபுறம் இப்போட்டியில் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறுவதை தடுக்கும் முனைப்புடன் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பவுண்டரியை அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முயற்சித்த போது மதுஷங்கா வேகத்தில் 4 ரன்களில் கிளீன் போல்டானார்.
இந்த நிலையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தமக்கு மிகவும் பிடித்த இலங்கையை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் தன்னுடைய பங்கிற்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 8 பவுண்டரியுடன் முதல் ஆளாக அரை சதமடித்தார்.