
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ வீரர் யூசெப் என்-நெசிரி அடித்த கோல் காரணமாக போர்ச்சுகல் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் பலருக்கும் போர்ச்சுகல் அணியின் தோல்வி அதிர்ச்சிகரமாக அமைந்தது.
இதனிடையே, தோல்வியால் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார். மைதானத்தில் மட்டுமல்ல, டிரஸ்ஸிங் ரூமிற்கு செல்லும்போது அழுதுகொண்டே சென்றார். இந்தக் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமரவைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட 21 வயதான கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.