
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததன் விளைவாகவும், சாஸ்திரி பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டதன் விளைவாகவும், 2019ஆம் ஆண்டுக்கு பிறகும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இருவரும் இணைந்து 4 ஆண்டுகள் பரஸ்பர புரிதலுடன் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறப்பான பங்களிப்பை செய்தனர். ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் (2018-2019) டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்ததுடன், 2020-2021ஆம் ஆண்டில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது.
சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிவரை வென்றது. இந்த 2 முக்கியமான நாக் அவுட் போட்டிகளிலுமே இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றுத்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.