
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 03ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி சமன்செய்தாலோ தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும். அதேசமயம் தொடரை சமன்செய்யும் நோக்குடன் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தினால் புத்தாண்டு என்று கூட பாராமல் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல் போட்டியில் செய்த தவறை திருத்திக் கொள்ளும் வகையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியது. குறிப்பாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுகிறார்களோ, அதே ஸ்டைலில் இந்தியாவும் இறங்க முடிவு எடுத்து உள்ளது.