
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சதம் அடித்திருந்தார். அதன் பின் அவரால் சதமடிக்க முடியவே இல்லை. சதம் அடிப்பது என்பது விராட் கோலிக்கு கடந்த 2 ஆண்டுகளாக எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இங்கிலாந்து தொடரில் கோலியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மாற்றியமைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 11 மற்றும் 20 ரன்களை மட்டுமே அவர் குவித்தார்.
அதன் பின் விளையாடிய 2 டி20 போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 25 பந்துகளை சந்தித்த விராட் கோலி 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.