
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது 4ஆவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. குரூப் பி பிரிவில் 2ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
இல்லையெனில் 3ஆவது இடத்தில் உள்ள வங்கதேச அணி முந்திவிடும். இப்படிபட்ட முக்கியமான போட்டியில் இந்திய அணி தவறுகளை சரி செய்துக்கொண்டு களமிறங்க வேண்டும். அதன்படி ஓப்பனிங் வீரர்கள் கேஎல் ராகுலை நீக்கியே ஆக வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். முதல் 3 போட்டிகளிலுமே கேஎல் ராகுல் மிக மோசமாக சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியுள்ளார். எனவே ரிஷப் பந்தை அணிக்குள் சேர்க்கலாமா? என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்நிலையில் கேஎல் ராகுலை தயார் செய்வதற்காக விராட் கோலியே பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவுட் சைட் ஆஃப் பந்தை எதிர்கொள்வதில் பலவீனமாக உள்ள கேஎல் ராகுல், அதற்காக பயிற்சி எடுத்து வந்தார். அப்போது உள்ளே சென்ற கோலி, ராகுலின் தவறுகளை சுட்டிக்காட்டி, பேட்டிங் பொஷிசனில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் அறிவுரை கூறியுள்ளார்.