ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்வது விராட் கோலி கையில் தான் உள்ளது - முகமது கைஃப்!
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபிக்கு விராட் கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் ஃபார்மில் இருப்பது முக்கியம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய ரசிகர்களால் ‘கிரிக்கெட் திருவிழா’ என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசனை எதிர்நோக்கிவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் தொடக்கத்தில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக இத்தொடர் ஆரம்பிப்பதற்கு 8 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது.
Trending
அதன்படி தொடரின் முதல் லீக் போட்டியிலேயே ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காரணம் ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக இருந்துவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனிலாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது விராட் கோலியின் கைகளில் தான் உள்ளது என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி கடந்த 1-2 ஆண்டுகளாக அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்; அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆசிய கோப்பையின் போது அவர் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தது எனக்கு நினைவிருக்கிறது; அதன்பிறகு, அவர் டி20 கிரிக்கெட்டில் அதிகம் பங்கேற்கவில்லை. ஆனாலும் அப்போதிருந்து அவர் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார்.
விராட் கோலி போன்ற ஒரு வீரர் ஃபார்மில் இருக்கும்போது, ஒவ்வொரு போட்டியிலும் எப்படி ரன்களை எடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போதும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் நடப்பு ஐபிஎல் சீசனிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன், விராட் கோலியிடம் இருக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் இடைவேளைக்கு பிறகு அவர் களத்திற்கு திரும்பும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பெரும்பாலான வீரர்கள் ஃபார்மில் இருக்க தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் விராட் கோலி ஒவ்வொரு முறையும் இடைவேளையில் இருந்து திரும்பி வரும்போது, அவர் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேனாகக் காணப்படுகிறார். அதேபோல் நடப்பு சீசனுக்கான ஆர்சிபி அணியில் கேமரூன் கிரீன் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் உள்ளனர். ஆனால் விராட் கோலியின் ஃபார்ம் தான் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் இடத்தை தீர்மானிக்கும். பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபிக்கு விராட் கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் ஃபார்மில் இருப்பது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணி: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜேக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லோக்கி ஃபெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.
Win Big, Make Your Cricket Tales Now