
சமீப காலங்களில் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால அவரது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அனால் இதுகுறித்து சஹால் மற்றும் தனஸ்ரீ ஆகியோர் தங்கள் பக்க விளக்கங்களை கொடுத்த போதும், அவர்கள் விவாகரத்து பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுக்கவில்லை.
இதுதவிர்த்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார். மேற்கொண்டு முகமது ஷமி, ஷிகர் தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்சமயம் அவர்களது வரிசையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் தான், 21 ஆண்டுகால திருமண வாழ்க்கையை இருவரும் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.