
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக தனது முத்திரையை பதித்துள்ளார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்பாடுகள் வெளிவரவில்லை. இதனால் அவருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், அவர் தற்சமயம் இந்தியாவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாட சூர்யகுமார் யாதவ் முடிவுசெய்துள்ளார். முன்னதாக இத்தொடருக்கான மும்பை அணியில் அவர் முதலில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் தாமாக முன்வந்து இத்தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்ததாகவும், மேலும் அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடவுள்ளதாகவும் மும்பை அணி தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "இந்தியாவுக்காக நான் மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன். புஜ்ஜி பாபு கிரிக்கெட்டில் விளையாடுவது இந்த சீசனில் சிவப்பு-பந்து போட்டிக்கு நல்ல பயிற்சியை அளிக்கும்" என்று கூறினார். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சர்ஃப்ராஸ் கான் தலைமையிலான மும்பை அணியில் சூர்யாயகுமார் யாதவ் விளையாடவுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.