
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ஃபார்மில் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்த சீசனில் அவர் இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடி 216 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
அத்துடன் கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த கோலி அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். அதிலும் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த ஆட்டங்களில் கோல்டன் டக் அவுட் ஆன அவர் அரை சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் ஒரு வழியாக குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியின்போது 58 ரன்கள் எடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இச்சூழலில் விராட் கோலி சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத்தும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.