
டி20 உலகக் கோப்பை 2022 பிரதான சுற்று போட்டிகள் வரும் 23ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது. அதற்குமுன் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளன. இந்திய அணி தற்போது தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது. அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர்கள் ஆரோன் பிஞ்ச் 76 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும் சேர்த்து அபாரமாக செயல்பட்டனர். அடுத்து ஸ்மித் 11, மேக்ஸ்வெல் 23 , ஸ்டாய்னிஸ் 7, டிம் டேவிட் 5 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற கடைசி இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷல் படேல் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில், இறுதி ஓவரில் ஷமி 2,2 என முதல் இரண்டு பந்துகளில் ரன்களை விட்டுக்கொடுத்தார். மூன்றாவது பந்தில் கம்மின்ஸை கோலி லாங் ஆனில் ஒத்த கையில் கேட்ச் பிடித்த நிலையில் அடுத்து ஆகர் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்துகளில் ஷமி யார்க்கர் வீசி இங்கிலிஸ், ரிச்சர்ட்சன் ஆகியோரை கிளின் போல்ட் ஆக்கினார்.