-mdl.jpg)
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டமானது இன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் குறிப்பாக ஷாகிப் அல் ஹசன் ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயற்சி செய்த ரோஹித் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ரிஷப் பந்துடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 14 ரன்களுக்கும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 31 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி இன்னிங்ஸைத் தொடர்ந்தார்.