Advertisement

ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!

ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் போது நான் பந்து ஸ்டெம்பை தாக்கும் என்று நிச்சயம் நினைத்தேன். நினைத்தபடியே நடந்தது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2023 • 15:21 PM
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா! (Image Source: Google)
Advertisement

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக  குயிண்டன் டி காக் 108, எய்டன் மார்க்ரம் 56 ரன்களை எடுத்தனர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 177 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி ஏமாற்றமளித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Trending


மேலும் நேற்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவருக்கும் வழங்கப்பட்ட மூன்றாவது நடுவரது தீர்ப்பு சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்தது. ரபாடா பந்துவீச்சில் ஸ்மித்துக்கு பந்து ஸ்டெம்பில் படுவதற்கான வாய்ப்பே இல்லாதது போல் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவரிடம் சென்ற பொழுது துல்லியமாக பந்து ஸ்டெம்பில் சரியாக பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய காகிசோ ரபாடா, “மூன்றாவது நடுவரின் தீர்ப்புக்காக காத்திருந்தேன். பந்து கொஞ்சம் ஸ்கிட் ஆனது போல உணர்ந்தேன். பந்து உண்மையில் அதிகம் பவுன்ஸ் ஆகவில்லை. அதே சமயத்தில் ஸ்மித் ஸ்டெம்புகளுக்கு குறுக்கே நடந்து விளையாடுவார். இதுதான் அவருடைய ட்ரிகர் பாயிண்ட். அந்தக் கோணத்திலிருந்து நானும் டி காக்கும் பார்க்கும் பொழுது, அது அவுட் என்று எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

இதன் காரணமாகவே நாங்கள் அப்பீல் செய்தோம். இன்று எங்களுக்கு தொழில் நுட்பம் சாதகமாக அமைந்துவிட்டது. நான் பந்து ஸ்டெம்பை தாக்கும் என்று நிச்சயம் நினைத்தேன். பந்து விலகிச் செல்லும் என்று நான் நினைக்கவில்லை. நினைத்தபடியே நடந்தது. ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய வீரர். அவர் நிலைத்து நின்றால் ரன்கள் எடுப்பார் என்று நமக்குத் தெரியும். எனவே நிச்சயமாக அவர் ஒரு பெரிய விக்கெட்தான். எனவே அவரை முன்கூட்டியே வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement