ஆஸ்திரெலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் ஷுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 28 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சிவம் தூபே பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ஷுப்மன் கில்லும் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 46 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அக்ஸர் படேல் 21 ரன்களைச் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி பேட்டர்களும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர். அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மேத்யூ ஷார்ட் 25 ரன்களையும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 30 ரன்களுக்கும், ஜோஷ் இங்கிலிஸ் 12 ரன்களுக்கும், டிம் டேவிட் 14 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 17 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.