
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி ஜூன் மாதம் ஏழாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை லண்டன் நகரில் அமைந்துள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன.
கடந்த, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் உலக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. தற்போது நடைபெற இருக்கும் தொடரை வெல்வதற்கு வலுவான இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முகமது ஷிமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஆல்ரவுண்டர் சர்துல் தாகூர் இடம் பெற்றிருக்கிறார்.
தனது முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றார் உனத்கட். அந்தப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தினார். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெய்தேவ் உனத்கட் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் உலகத்தரம் வாய்ந்த வேக பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் தெரிவித்திருக்கிறார்.