
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 48, ஷுப்மன் கில் 53 ரன்கள் விளாசி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
அதை வீணடிக்காமல் அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி மிகச் சிறப்பான சதமடித்து 103 ரன்களும் கேஎல் ராகுல் 34 ரன்கள் எடுத்து 41.3 ஓவரிலேயே இந்தியா தொடர்ச்சியான 4வது வெற்றியை பதிவு செய்ய உதவினர். இருப்பினும் அந்த போட்டியில் விராட் கோலி சுயநலத்துடன் சதமடித்ததாகவும் அவருக்கு நடுவர் கடைசி நேரத்தில் ஒயிட் வழங்காமல் சாதகமாக நடந்து கொண்டதாகவும் நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவுக்கு 2 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்ட போது விராட் கோலி 97 ரன்களில் இருந்த சூழ்நிலையில் பவுலர் லெக் சைட் திசையில் வீசிய பந்தை நடுவர் ரிச்சர்ட் கெட்டல்போரக் வேண்டுமென்றே வைட் வழங்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலையின்றி முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் என்று வாசிம் அக்ரம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.