சச்சின் சாதனையை இவர் முறியடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் என்று கணித்துள்ளார் வாசிம் ஜாஃபர்.
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 142 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி 5ஆவது டெஸ்டை வெல்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜோ ரூட்டின் 28ஆவது சதம் ஆகும். இந்த தொடரில் ஜோ ரூட் மொத்தமாக 737 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டுகளும் சாய்த்தார். இதன்மூலம் அதிக சதமடித்த சமகால கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் தற்போது முதலிடத்தில் இருக்கிறார்.
Trending
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஜோ ரூட், 10,458 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை குவித்து டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் தகர்த்து விடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் ஜாஃபர் மேலும் கூறுகையில், “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்று விட்டுச் செல்வதை அறிவோம். எனினும் தற்போது 31 வயதான ஜோ ரூட், இன்னும் 5-6 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார் என்பதால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now