
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ரிஷப் பந்தும் ரன்கள் ஏதும்மின்றி ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி 34 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த விராட் கோலி மற்றும் அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் இருவரும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாச, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. இதனால் இந்திய அணி 100 ரன்களையும் கடந்தது.