
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த ஷுப்மன் கில்லும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தையும், ஷுப்மன் கில் தனது 4ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றும் அசத்தியது. அதன்பின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 103 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டொக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.