
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த டேவிட் வார்னர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளிலும், டேவிட் வார்னர் 46 பந்துகளிலும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 67 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைக் குவித்தது. ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளையும், பிலால் கான், கலீலுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.