
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ஜோர்டன் ஹெர்மான் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிக பட்சமாக ஜோர்டன் ஹெர்மான் அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுன், மிட்செல் ஓவன் மற்றும் ஈஷான் மலிங்கா தாலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சுக்கு ஈட்கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ருபின் ஹர்மான் 35 ரன்களையும், ஆண்டில் பெஹ்லுக்வாயோ 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பார்ல் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.