
சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியானது த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்திததுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் முதல் அணியாக இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 18ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ஷஷாங்க் சிங் முதல் பந்தில் பவுண்டரியையும், இரண்டாவது பந்தில் அபாரமான சிக்ஸரையும் விளாசி அசத்தினார்.