
பிக் பேஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் ஆரோன் ஹார்டி 34 ரன்களையும், ஆஷ்டன் அகர் 51 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், டாம் ரோஜர்ஸ், வில் சதர்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர் ரெனிகேட்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக, அந்த அணி 44 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் வில் சதர்லெட் - தாமஸ் ரோஜர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர்.