
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களிலும், ஆயூஷ் மாத்ரே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், தீபக் ஹூடா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.