
இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வாழ்வா சாவா போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுலும் 14 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இந்த சரிவுக்கு பிறகு சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்து 45 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் கவாஸ்கரின் சாதனையை கில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
கஸ் அட்கின்சன் வீசிய 27ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட கில் அதனை தடுத்த கையோடு ரன் எடுக்க ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன் வேண்டாம் என்று கூறவே, கில் மீண்டும் கிரீசுக்குள் செல்ல முயற்சித்தார். ஆனால் அதற்குள் பந்தை பிடித்த அட்கின்சன் ஸ்டம்பை நோக்கி துல்லியமான த்ரோவை அடித்து ஷுப்மன் கில்லை ரன் அவுட் செய்து அசத்தினார். இந்நிலையில், ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.