
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தற்போது முதல் சுற்று நிறைவடைந்து முக்கியமான சூப்பர் 12 சுற்று தொடங்கியுள்ளது. அதில் அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற முதல் சூப்பர் 12 போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொண்டது.
சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிரடியாக 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 42 ரன்களை விளாசி அவுட்டானார்.
அவருடன் அசத்திய மற்றொரு தொடக்க வீரர் டேவன் கான்வேயுடன் அடுத்ததாக களமிறங்கி கை கோர்த்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாக விளையாடி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கிய டேவோன் கான்வே 7 பவுண்டரி 2 சிக்சருடன் 92 குவித்தார். அவருடன் கடைசி நேரத்தில் 2 சிக்சரை பறக்க விட்ட ஜிம்மி நீஷம் 26 ரன்கள் குவித்து ஃபினிசிங் செய்தார். மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.