
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மஹ்மதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடாகேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 82 ரன்களையும், எவின் லூயிஸ் 49 ரன்களையும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயாஅன் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 12) நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச வீரர் தன்ஸித் ஹசனின் செயல் குறித்த காணொளி ஒன்று இணையாத்தில் வைரலாகி வருகிறது.