ஐபிஎல் 2022: டு பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோலி, வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடன்க உள்ளது. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக நடப்புச் சாம்பியனாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இதர அணிகளைக் காட்டிலும் கோப்பையை தக்க வைப்பதற்காக முன்கூட்டியே குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த ஒரு வாரமாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Trending
அதேபோல் இந்த தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வெல்வதற்கு ஒரு சில அணிகள் தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்ஸியை வெளியிட்டு வருகின்றன. மேலும் பஞ்சாப், கொல்கத்தா போன்ற கேப்டன் இல்லாத அணிகள் தங்களின் புதிய கேப்டனை அறிவித்துள்ளன.
அந்த வரிசையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தங்களின் புதிய கேப்டன் மற்றும் ஜெர்சியை நேற்று அறிவித்துள்ளது. இதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பெங்களூரு ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஐபிஎல் 2022 தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தும் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர் ஃபாஃப் டு பிளேஸிஸ் அறிவிக்கப்பட்டார்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த அவர் அந்த அணியின் முதுகெலும்பு வீரராகக் கருதப்பட்டார். குறிப்பாக கடந்த வருடம் கூட 633 ரன்கள் விளாசிய அவர் சிஎஸ்கே அணி 4ஆவது முறையாக கோப்பையை வெல்வதற்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை அந்த அணி வாங்காத நிலையில் 7 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூரு அணி நிர்வாகம் தற்போது தங்கள் அணிக்கு புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவின் தேசிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் நிறைந்த இவரை கேப்டனாக நியமித்துள்ளதால் பெங்களூரு அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் புதிய கேப்டனாக டு பிளேஸிஸ் நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அந்த அணிக்காக 2013 – 2021 வரை முழுமூச்சுடன் செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு போராடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
“Happy to pass on the baton to Faf! Excited to partner with him and play under him” - A message from @imVkohli for our new captain @faf1307. #PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/lHMClDAZox
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
இதுபற்றி பேசிய அவர் “டு பிளேஸிஸ் தலைமையில் அவரின் கீழ் விளையாட மிகுந்த ஆவலுடன் உள்ளேன். அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு பாடுபடுவதற்காக காத்திருக்கிறேன்” என கூறினார்.
அதேபோல் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டது பற்றி தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கூறும்போது, “டு பிளேஸிக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை முதலில் ஏலத்தில் தேர்வு செய்து பின்னர் கேப்டனாக பெங்களூரு அணி நிர்வாகம் தேர்வு செய்ததில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது” என கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now