
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணியை எளிதில் சுருட்டி விடலாம் என இங்கிலாந்து வீரர்கள் எண்ணினர். ஆனால், அவர்களுக்கு ரிஷப் மற்றும் ஜடேஜா சிம்ம சொப்பனமாக இருந்தனர்.
ரிஷப் தன்னுடைய அதிரடியாலும், ஜடேஜா தன்னுடைய பொறுப்பான நிதான ஆட்டத்தாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சோதித்தனர். ரிஷப் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜா நேற்று 83 ரன்களில் இருந்த நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சதத்தை பதிவு செய்தார். பின்னர் அடுத்தடுத்து ஜடேஜாவும், ஷமியும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று தப்பு கணக்கு போட்ட இங்கிலாந்து அணிக்கு மரண பயத்தை காட்டினார் இந்திய அணி கேப்டன் பும்ரா.