
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ஆர்சிபி அணியின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 26 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் தலா 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி ஆர்சிபி அணியானது விளையாடி வருகிறது.