
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கைல் வெர்ரைன் சதமடித்து அசத்தியதுடன் 114 ரன்களையும், மறுபக்கம் அரைசதம் கடந்த வியான் முல்டர் 54 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல அவுட்டானது. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 202 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேசயில் ஷாத்மான், மொனினும் ஹக், நஜ்முல் ஹொசைன், உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மஹ்முதுல் ஹசன் 38 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் 31 ரன்களுடனும் தொடர்ந்தனர்.