
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்க 89 ரன்களையும், தினேஷ் சண்டிமா, ஏஞ்சாலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 44 ரன்களையும் சேர்த்ததன் கரணமாக 328 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் டேன் பாட்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கேசவ் மகாராஜ், மார்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா 66 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 55 ரன்களையும் சேர்க்க, இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 348 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது.