
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா விக்கெட்டை வீழ்த்திய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை மஹீஷ் தீக்ஷனா வீசிய நிலையில் அந்த ஓவரின் 5ஆவது பந்தை ரியான் ரிக்கெல்டன் எதிர்கொண்டார். அப்போது தீக்ஷ்னா கேரம் பந்தாக வீசிய நிலையில் அதனை கணிக்க தவறியா ரிக்கெல்டன் பந்தை முழுவதுமாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டும் ஆனார். இதனால் இப்போட்டியில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களைச் சேர்த்த கையோடு ரிக்கெல்டன் ஆட்டமிழந்து வெளியேரினார். இந்நிலையில் காணொளி வைரலாகி வருகிறது.