Advertisement

அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவர் தீர்ப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும், மார்கஸ் ஸ்டொய்னிஸிற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan October 12, 2023 • 21:07 PM
அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவர் தீர்ப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவர் தீர்ப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி! (Image Source: Google)
Advertisement

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து லக்னோ மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. இன்றைய நாள் முழுக்க ஆஸ்திரேலியா அணிக்கு சரியாக சென்ற ஒன்று டாஸ் வெற்றி பெற்றது மட்டும்தான்.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 108, எய்டன் மார்க்ரம் 56 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மிட்சல் மார்ஷ் 7 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 13 ரன்களில் உடனுக்குடன் வெளியேறினார்கள்.

Trending


இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக மூன்று பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை தொடங்கினார். இந்தப் போட்டியை வென்றாக வேண்டியது முக்கியம் என்கின்ற காரணத்தினால், அவர் எடுத்ததும் அதிரடியில் ஈடுபட்டார். இந்த நிலையில் ரபடா வீசிய பந்துக்கு எல்பிடபிள்யு கேட்கப்பட்டது. கள நடுவர் அதற்கு அவுட் தரவில்லை. 

எனவே தென் ஆப்பிரிக்கா மூன்றாவது நடுவரிடம் சென்றது. பந்து ஸ்மித் கால் காப்பில் பட்ட இடத்தில் இருந்து, ஸ்டெம்பை விட்டு விலகிச் செல்லலாம், இல்லை உரசியபடி செல்லலாம் என்கின்ற அளவில்தான் இருந்தது. மேலும் ஸ்டெம்ப்பை தாண்டி செல்வதற்கும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் கள நடுவர் ஆச்சரியப்படும் அளவிற்கு பந்து சரியாக லெக் ஸ்டெம்பை தாக்கியது. இதன் காரணமாக ஸ்மித் ஆட்டம் இழந்து வெளியேறினார். 

ஆனால் தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபட்ட யாராலும், அந்தப் பந்து ஸ்டெம்பை தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, ரபடா ஸ்டாய்னிஸ் இடுப்பை நோக்கி வீசிய பந்தை அவர் தட்டி விட முயற்சி செய்ய, பின்புறமாக சென்ற பந்தை விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் பாய்ந்து பிடித்தார். இதற்கும் அவுட் கேட்க கள நடுவர் தரவில்லை.

எனவே மூன்றாவது நடுவரிடம் தென் ஆப்பிரிக்கா சென்றது. ரீ ப்ளேவில் பார்த்த பொழுது, பந்து பேட்ஸ்மேன் கையுறையில் பட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால் அந்த நேரத்தில் அந்தக் கை பேட்டில் தொடர்பு கொண்டிருக்கவில்லை. பேட்டில் கை தொடர்பில்லாமல் இருக்கும் பொழுது பந்து கையுறையில் பட்டு பிடிக்கப்பட்டால் அது அவுட் கிடையாது என்பது கிரிக்கெட் விதி.

 

ஆனாலும் இதற்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க மீண்டும் சர்ச்சையானது. இதற்கான சரியான விளக்கங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. மேலும் ஸ்மித் ஆட்டம் இழந்த பொழுதும் தொலைக்காட்சியில் பந்து எப்படி அடித்தது என்பதை எடுத்ததும் காட்டாமல், நேராக பந்து ஸ்டெம்பை அடிப்பதாக காட்டி அவுட் கொடுக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் ரீ ப்ளேவே செய்யப்பட்டது.

தற்பொழுது நூறு ரன்களை எட்டுவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. ஆஸ்திரேலியா அணிக்கு தற்பொழுது களத்தில் முழுமையான பேட்ஸ்மேனாக லபுஷாக்னே மட்டுமே இருக்கிறார். அவருடன் ஸ்டார்க் இணைந்து விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் தோற்றால் அரையிறுதிக்கு பெரிய வெற்றிகளைப் பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆஸ்திரேலியா தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement