
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ரியான் பராக்கும் 25 ரன்களுடன் தனது விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெஸ்வாலும் 25 ரன்களுடன் நடையைக் கட்ட, அதன்பின் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, நிதீஷ் ரானா உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஷுபம் தூபே 9 ரன்களுக்கும், பொறுப்புடன் விளையாடி வந்த துருவ் ஜூரெல் 33 ரன்களிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 7 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களிலும் என சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.