
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (பிப்ரவரி 02) ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில், 24 வயதான ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா வெற்றியின் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார், ஆனால் இந்திய அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது கூர்மையான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் தடுமாற வைத்தார். மேற்கொண்டு 2.3 ஓவர்களை மட்டுமே வீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தான் முழு உடற்தகுதியுடன் இருபதையும் உறுதிசெய்துள்ளார்.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய முகமது ஷமி அதன்பின், காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். இதனால் அவர் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை, பார்டர் கவாஸ்கர் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடர்களையும் தவறவிட்டார்.